Monday, March 2, 2009

பஞ்சபூதமாய் அவள்!


பாகம்பிரியாளின் கவிதை- 
காதல் என்று வந்து விட்டாலே நூதனமான உதாரணங்கள், தானே கவிதைகளில் முளைத்து விடும். கற்பனைக் குதிரையின் வேகத்துக்கு அளவுண்டோ! சிறிய பனித்துளி முதல் வானம் வரை காதல் கவிதையின் சுவடும் சாயலும் படிந்திருக்கும். அந்தச் சாயலின் வரிகள் பொதிந்த கவிதை இதோ உங்கள் முன்னால்!

பஞ்சபூதமாய் அவள்! 
மேனியெங்கும் பூக்கள் அலங்கரிக்க
மரகதப்பாய் விரிக்கும் பூமி அவள்.
மாந்தர்க்கு வயிறு குளிர அள்ளித்தரும்
மாதாவாம் மண் மகளின் மடியாய் அவள்.
மௌனத்தவம் புரிந்து பூமியின் பரப்பெங்கும்
பயிர்க்கோலம் கொண்ட அழகு வயலாய் அவள்.
 
கலகலவென்று அலைந்தாடும்  நெல்மகளின்
கால்வருடும் தெளிய நீரோடையாய் அவள்.
பொங்கிச் சிரித்து குதித்தோடி பொன்னான 
பூமியெங்கும் நனைக்கும் ஆற்று நீர் அவள்.
அழகு முத்தும் சங்கும் அள்ளித் தரும்
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அவள்.
 
போகும் வழியெலாம் பூக்களின் தலை கலைத்து
புதுக் கோலம் காண வைக்கும் தென்றலவள்.
வாசமலர் இதழ்களையெல்லம் இதமான 
வண்ணக் குவியலாக்கும் தென்றலவள்.
பூக்காட்டின் உள்ளே புகுந்து விளையாடி
போகும் வழியெல்லாம் வாசத் தடம் பதிக்கும் தென்றலவள்.

அனைத்தையும் அள்ளித் தின்றும் ஆத்திரமடங்காமல்
ஓங்கி எரியும் ஊழித்தீயாய் ஆடும் அவள்.
அன்பின் வழிகண்ட மாந்தரெல்லாம்
அதத்தில் ஏற்றி வைத்த அணையா விளக்காய் அவள்.
கருநீலப் போர்வையை கிழித்தெறிந்து
காலை வணக்கம் சொல்லும் கதிரவனாய் அவள்.

வண்ணம் கொண்ட விண் மீன் பூக்களை இறைத்து
வைத்திருக்கும் வான் வெளியாய் அவள்.
பால்நிலவெனும் தொட்டிலில் துயிலும்
பூமிக் குழந்தைக்கு குடை பிடிக்கும் மேகம் அவள். 
அன்பையும், காதலையும்தன்னுள் அடக்கிக் கொண்ட
அகண்ட விண் வெளியாய் நிறைந்திருக்கும் அவள்.

No comments:

Post a Comment