Monday, November 21, 2011


எனக்கும் அது தேவைதான்!

பாகம்பிரியாள்

செய்தித்தாள் வந்தவுடன் தினம் பாகப் பிரிவினைதான்!
ஓடும் பேருந்தில் இடம் பிடிக்க அப்பாவுக்குத் தேவை ஒரு பக்கம்!
அம்மாவிற்கோ மாவு சலிக்க கைக் கொடுக்கும் தோழி!
அண்ணியும் அவ்வப்போது தேடுவாள், பக்கங்களை.
அலமாரியில் புடவையின் கீழ் அழகாய் விரிக்க!
தம்பிக்கு அவசியம் வேண்டும், வேலைச் செய்திக்கான பக்கம்!
சுட்டிக் குழந்தைகளும் தேடியே வந்திழுப்பர்
கத்திக் கப்பலும் பொம்மையும் செய்து பார்க்க!
மீதம் தனித்திருக்கும் ஒரு தாள் என்னைப் போல்.
எனக்கும் அது தேவைதான்.
என்றோ முகிழ்த்த காதல் முறிந்து போனதால்,
முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொள்ள!

====================
  Aug 25, 2009


யானையும் காதலும்!
பாகம்பிரியாள்

காதலும் யானையைப் போன்றுதான்!
அன்பின் இழை அகப்பட்ட புதிதில்,
கட்டிப்போடப்பட்டிருந்தாலும்
குட்டி யானையைப் போல் குறுகுறுவென்று
கண்ணில் பட்டதை எல்லாம்
தொட்டுப் பார்க்கும், தட்டிப் பார்க்கும்!
அன்பின் இழை இறுகிவிட்டாலோ
கம்பீரமாய், ஓரிடத்திலேயே நின்றுகொண்டு
அமைதியாய் அசை போட்டுக்கொண்டிருக்கும்
அன்பின் நினைவுகளை!

=====================
படம்: அண்ணாகண்ணன்
Aug 17, 2009 
சென்னை ஆன்லைனில் வெளியானது  

எதிரும் புதிரும்?


எதிரும் புதிரும்?
  

பாகம்பிரியாள்

நீயும் நானும், எதிரும் புதிருமாய்
ஒரு கோப்பை தேநீர் மற்றும்
ஓராயிரம் நினைவுகளை
ஓசையின்றி அருந்திக் கொண்டிருக்கிறோம்.

கை பட்டு உடைந்த
கோப்பைத் துண்டுகளை நீயும்,
கண்பட்டு உடைந்த
நினைவுகளை நானும்,
மௌனமாய்ப்
பொறுக்கிக் கொண்டிருக்கையில்
மனசுக்குள் ஓடுகிறது ஒரு கேள்வி!

"
முதலில் முடிக்கப் போவது யார்?"


================================
ஓவியம்: ஏ.பி. ஸ்ரீதர்
Aug 07, 2009சென்னை  ஆன்லைனில் வெளியான கவிதை 

பூவுக்குப் பூ


பூவுக்குப் பூ
பாகம்பிரியாள்
 
விட்டு விட்டுப் பெய்த மழையெல்லாம்
வெட்டி விட்டது என் வியாபாரத்தை.
உதிர்ந்த பூக்களின் குவியலோடு,
ஓரமாய் வாடியது என் அன்றாட வரவும்,
ஏங்க பூக்காரரே, இந்தாப்பா பூ”, -இதில்
ஏதும் என் செவிக்குள்ளே செல்லவில்லை.
துயர உலகில் சஞ்சரித்த என்னை,
துள்ளிக் குதிக்கவே  வைத்தது
பூக்கார்”    என்று காற்றிலே மிதந்து வந்த
பிஞ்சுக் குரலொடு ஒட்டி வந்த கையசைப்பும்!
அண்ணாந்து பார்த்தேன். பூத்திருந்தது பூ முகம்!
பூவுக்குப் பூ தரச் செல்லும்  பெருமிதத்தில் நான்!

என் கன்னங்கள்!

என் கன்னங்கள்!

பாகம்பிரியாள்

மின்னஞ்சலில் வரும் காதல் தூது எல்லாம் எனக்கு
எழுத்துக்களின் மௌன ஊர்வலமாகவே தோன்றுகிறது.
கடிதங்களில் தென்படும் வரிகள் எல்லாம்
கரும் எழுத்துக்களின் நடனமாய் மாறி விடுகின்றன. .
குறுஞ்செய்தியாய் வருபவை  எல்லாம்
குறுகுறுப்புக்கு அவ்வப்போது  தீனி போடும்.
இவை எல்லாம் என் காதலைக் கட்டிக்காக்கும்
என்று எண்ணியே இறுமாந்திருந்தேன்!
ஆனால்
குழைவான உன் குரலைக் கேட்டவுடன்
குப்பெனச் சிவக்கும் என் கன்னங்கள்
காட்டிக் கொடுத்து விடுகின்றன.. என் காதலை!
படத்திற்கு நன்றி