Monday, February 23, 2009

அம்மாவின் புடவை


அடுக்கி வைத்த நினைவுகளை கலைத்தது 
அலமாரியிலிருந்து நழுவிய அம்மாவின் புடவை! 
பதமாய் வந்த துணியின் வாசம் இன்றைக்கும் 
பொக்கிஷமாய் மனதில் பதுங்கியிருக்கும்! 
இஸ்திரிப்பெட்டி இல்லா காலம் நித்தம் 
அதன் இருமுனைப் பிடிக்க அடிபிடி யுத்தம்! 
அழகாய் நீவி மடித்து வைப்பதில் கிடைக்கும் 
அருமைப்பரிசாய் அம்மாவின் அன்பு முத்தம்! 
கட்டமும் வட்டமும் கண்டு கொள்ள  உதவும் 
கணிதப்பலகையாய் ஆனது அழகுப்புடவை.! 
கண்ணீரோடு கசப்பையும் துடைக்கும் கலையை 
கச்சிதமாய் கற்றுத் தந்ததில்  அது எங்கள் ஆசான்! 
பழுப்பேறிய முந்தானையில் முடிந்த காசு 
பால் ஐசாகவும், பஞ்சு மிட்டாயாகவும் இனித்தது. 
எங்களோடு புடவையும்,  பாலும் மோரும் சுவைத்து 
அழகுப் பாப்பாவிற்கு ஏணையாகிப் போனது! 
சுருக்கம் பல வந்தாலும், வருடம் பல போனாலும் 
நெருக்க இழை விலகாமல் நெருக்கிப் பிடித்தது ! 
மீண்டும் புடவையை வருடும் விரலுக்கு புரிபட்டது 
மறைந்திருந்த பாசமும் அம்மாவின்  வாசமும்!
 

அன்புலகின் அழகு வழி!


அன்பு என்பது வந்து விட்டாலே அனைத்தும் அழகாகவேத் தெரியும். அழகியைப் பயன்படுத்தி மலர்ந்த இந்த அன்புக் கவிதை அன்பு உள்ளங்களுக்கு சமர்ப்பணமாகட்டும்! 

அன்புலகின் அழகு வழி! 
ஆர்ப்பரிப்பவர்க்கெல்லாம் தெரியுமோ?
ஆழ்மனதை அகழ்ந்தவர்க்கே தெரியும்!

இங்குதான் கிள்ளி வைத்த நினைவுகள்
அள்ள அள்ள வளர்ந்து கொண்டே இருக்கும்.
தள்ள தள்ள தேங்கிக் கொண்டே இருக்கும்!

இங்குதான் சொல்லிச் சென்ற வார்த்தைகள் 
வண்ணம் பெற்று வானவில்லாய் வலம் வந்து 
வண்ணத்தை பூக்களுக்கு பூசிச் சிரிக்கும்! 

இங்குதான் தப்பிச்சென்ற நினைவுகள்     
தேக்கம் கண்டு நேசம் படர, படர
ஏக்கப் பூவாகி உதிர்ந்து கொண் டே இருக்கும்!

இங்குதான் வந்து நின்ற  வாச வசந்தம்
வளம் பலவற்றை வகை வகையாய்   
வாயில் தோரணமாய் அழகாய்  க(கா) ட்டி வைக்கும்!

இங்குதான் நேச நினைவுகள் எல்லாம் 
இனிய வலையாகி, விரிவு பெற்று
கனிந்த உளமதை கண்ணி(ல்) வைத்துப் பிடிக்கும்.

முரண்

நான் சிறிய பூதான் பிடிக்கும் என்றால்,
நீயோ வண்ண ரகளையான ஆரஞ்சும், மஞ்சளும்தான் பிடிக்கும் என்கிறாய்.
நான் காலாற நடந்து போவதுதான் சுகம் என்றால்,
நீயோ படபடவென்று போகும் வாகனம்தான் என் தேர்வு என்கிறாய்.
நான் நம் நினைவுகளை அடுக்கி வைத்தால்,
நீயோ விசிறி வாழை போல் அதைப் பரப்பி வைக்கிறாய்.
நான் நம் நினைவுகளைக் கோர்க்க ஊசியும் நூலுமாய் வந்தால்,
நீயோ வார்த்தைக் கத்திரியால் வகை வகையாய் வெட்டுகிறாய்.
நான் நீர் போலுன்னை நேசமாய் நெருங்கி வந்தால்,
நீயோ நெருப்பலைகளையே வீசுகிறாய்.
நான் நினைவுக் குளத்தை மௌனமாய் ரசித்துக்கொண்டிருந்தால்,
நீயோ(யே) கல்லாய் விழுந்து எனைச் சிதற வைக்கிறாய்.
சிறு சண்டைக்குப் பின் சமாதானம் பேச
சல்லடையாய் சலித்து நல்லவற்றைத் திரட்டி வந்தால்,
நீயோ முறம் வைத்து வேண்டாத நினைவுகளைத் தூற்றுகிறாய்.
நான் இனிப்புத்தான் எனக்குப் பிடிக்கும் என்றால்,
நீயோ காரம் தின்று காபி குடியுங்கள், அதன் சுவையே தனி என்றாய்.
நீயும் நானும் இப்படி முரண்படுவதால்தான்
ஒருவரை ஒருவர் நினைக்கிறோமோ?
ஆமாமாம். எதிர்முனைகள்தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும்!

விழிகள் சொன்ன கதை


விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
விடிய விடிய வெள்ளிநிலவு சிரித்தது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாசலுக்கு அருகிலேயே நின்றது இதயம்.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வண்ணத் தாமரை முகமும் சிந்தியது அழகு.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வானத்தின் மேகமும் செக்கர் நிறம் கொண்டது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாய் திறந்த மலர்களும் மோகனமாய்ஸ் சிரித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வெள்ளி அருவியும் வேகமாய்க் குதித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வான் மகளும் கிழக்கை நோக்கி ஓடினாள்.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
விழிகள் சொன்ன பதிலோ - மகிழ்ச்சி!


அன்று புரியவில்லை இன்று..?


கண் மூடியபின்பும் கண்ணீர் சிந்திய
கவிஞனின் மனநிலை அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது நீந்தத் தூண்டும் நெருப்பாறு என்று.

உணவிலாமல் உணர்வுகளையே உணவாகக்
கொண்ட கவிஞனனின் பசி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது காயசண்டிகைப் பசி என்று.

தன் நேசத்தையே அதன் நெய்யாக்கி
தூய விளக்கேற்றிய மதிப்பு அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது பிரபஞ்சத்தின் அணையா விளக்கென்று.

உளம் கனிந்து, ஓய்விலாத் தேடுதலை
ஓயாமல் தரும் ஓட்டம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது சலிப்பில்லாத சுகமான தேடலென்று.

விவரம் இல்லாமலே தேடுதலின்றியே
விலாசம் வந்த வழி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது தேவையான அன்பின் முகவரியென்று.

பாக்கள் எழுதி எழுதிப் படைத்த போதும்
பாடல்களின் ஆழம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது மூழ்காமலே முத்துத் தரும் கடலென்று.